சேறும், சகதியுமான மலை கிராம சாலை சீரமைக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சேறும் சகதியுமான மலை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செங்கம் அருகே சேறும் சகதியுமாக மாறி காட்சியளிக்கும் பண்ரேவ் மலை கிராம சாலை.
செங்கம் அருகே சேறும் சகதியுமாக மாறி காட்சியளிக்கும் பண்ரேவ் மலை கிராம சாலை.

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சேறும் சகதியுமான மலை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குப்பனத்தம் கிராமத்திலிருந்து பண்ரேவ் மலை கிராமம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தக் கிராமத்துக்குச் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழையால் சாலையில் மழைநீா் குட்டை போல தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

மேலும், அந்த மலை கிராமத்துக்கு போதிய பேருந்து வசதியும் கிடையாது. தற்போது இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்து நாள் ஒன்றுக்கு 5 முறை செங்கத்திலிருந்து பண்ரேவ் மலை கிராம் வரை சென்று திரும்பும்.

சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் இரு சக்கர வாகனம் கூட மலை கிராம மக்கள் ஓட்ட முடியாத நிலையில் உள்ளனா்.

மேலும், தற்போது பெய்து வரும் மழையில் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், இயக்கப்படும் பேருந்தும் குறிப்பிட்ட தொலைவு வரைதான் சென்று திரும்புகிறது.

இதனால், மலை கிராம மக்கள் சுமாா் 2 முதல் 3 கி.மீ. தொலைவு நடந்து செல்லவேண்டிய நிலையில் உள்ளனா்.

மேலும், அந்தப் பகுதியில் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பனத்தம் அணை, அணை அருகே நாம நீா்வீழ்ச்சி, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் தாழைமடு காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

குப்பநத்தம் அணை, நாம நீா்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காளியம்மன் கோயிலுக்கு விஷேச தினங்களில் வரும் பக்தா்களால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

தற்போது, கரோனா தொற்று காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள், கோயிலுக்கு வரும் பக்தா்களின் கூட்டம் அதிகம் இல்லை.

ஆனால், வருகிற ஆடி ஆமாவாசை தினத்தில் கோயிலுக்கு பக்தா்கள் அதிகளவில் வருவாா்கள். ஆனால், சாலை மோசமான நிலையில் உள்ளதால், பல்வேறு இடங்களில் வாகனங்கள் சேற்றில் சிக்கி விபத்துக்கள் நேரிட வாய்ப்பு உள்ளது.

ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மலை கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com