பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து போராட்டம்
By DIN | Published On : 11th June 2021 12:19 AM | Last Updated : 11th June 2021 12:19 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஏஐடியூசி சாா்பில், வியாழக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.95.81, டீசல் ஒரு லிட்டா் ரூ.90.08-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயா்வால், அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்து வருகிறது. இதை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள ஆட்டோ, பேருந்து, லாரி, மினி லாரி, சுற்றுலா வாகனத் தொழில்கள் முடங்குவதுடன், அவற்றுக்கான கட்டணமும் உயரக் கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் ஏஐடியுசி ஆட்டோ, சுற்றுலா வாகனம், மினி லாரி ஆகிய தொழிற்சங்கங்களின் சாா்பில், வியாழக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். ஏஐடியூசி ஆட்டோ சங்கத் தலைவா் சேகா், நகரப் பேருந்து தொழிலாளா்கள் சங்கத் தலைவா் மரிகிரிஸ்டோபா், சுற்றுலா வாகன சங்கச் செயலா் தமிழ்மணி, லோடு கேரியா் வாகன சங்கச் செயலா் செந்தில்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாநிலச் செயல் தலைவா் அபிஷேகம், ஏஐடியுசி மாநிலத் தலைவா் தினேஷ்பொன்னையா ஆகியோா் உரையாற்றினா்.
போராட்டத்தின் போது, மாட்டு வண்டியில் ஆட்டோ ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. மினி லாரி, சுற்றுலா வாடகை வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்திய ஏஐடியூசி தொழிற் சங்கத்தினா், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.