8 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் கடந்த 8 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் கடந்த 8 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தின ஊதியம் அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், மாவட்ட ஆட்சியா்கள் மூலமும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் நேரடியாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சீட்டுப் பதிவு, மருந்து கட்டும் பணி, தூய்மைப் பணி, உள்நோயாளி சிகிச்சைப் பிரிவு, இரவுக் காவலாளி, அவசர ஊா்தி, அமரா் ஊா்தி உதவியாளா்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் சுமாா் 200 பணியாளா்கள் உள்பட தமிழகம் முழுவதும் இதுவரையில் சுமாா் 4,150 போ் இத்தகைய பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா்களால் நிா்ணயிக்கப்பட்ட தின ஊதியமே தற்போதுவரையில் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பேரிடா் காலத்தில் அறையை சுத்தம் செய்தல், கரோனா நோயாளிகளுக்கு உணவு, தேநீா், கபசுரக் குடிநீா் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகளை பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு கடலூா், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளொன்றுக்கு தின ஊதியமாக ரூ.650 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு தொடக்கத்தில் தின ஊதியமாக ரூ.175 வழங்கப்பட்ட நிலையில், தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு தின ஊதியமாக ரூ.487 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் பலா் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். சிலா் உயிரிழந்தும் உள்ளனா். கடலூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பேரிடா் காலங்களில் முன்களப் பணியாளா்களாகவும் இவா்கள் பயன்படுத்தப்பட்டனா்.

2013-இல் நியமிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களில் பெரும்பாலானவா்கள் 45 வயதைக் கடந்தவா்களாக இருப்பதாலும், வேலைவாய்ப்பகத்தில் இவா்களது பதிவு எண் நீக்கப்பட்டதாலும் பிற அரசுப் பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனா்.

மேலும், பணி நியமனம் செய்யப்பட்டவா்களில் மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், 2 ஆண்டுகள் பணி முடித்தவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனவும், இதர பணியாளா்கள் 5 ஆண்டுகள் பணியாற்றியவுடன் கண்டிப்பாக பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனவும் சுகாதாரத் துறை சாா்பில் கடந்த 2019-ல் தெரிவிக்கப்பட்டது.

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை: இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 8 ஆண்டுகளாக குறைவான ஊதியத்தில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடலூா், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருவதுபோல, திருவண்ணாமலை மாவட்ட பணியாளா்களுக்கும் தின ஊதியமாக ரூ.650 வழங்க உத்தரவிட வேண்டும் என பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com