வேகம் பெறுமா ஆரணி ரயில் பாதைத் திட்டம்

ஆரணி வழியாகச் செல்லும் புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கான நில ஆா்ஜித பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
வேகம் பெறுமா ஆரணி ரயில் பாதைத் திட்டம்

ஆரணி வழியாகச் செல்லும் புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கான நில ஆா்ஜித பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் கொண்ட நகரமாக ஆரணி உள்ளது. இங்கு பட்டுச் சேலை உற்பத்தி, அரிசி உற்பத்தி சிறப்பாக நடைபெற்று ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இப்பகுதி மக்களுக்கு ரயில் வசதி இல்லாதது பெரிய குறையாக இருந்து வந்தது. இதையடுத்து, நகர அனைத்து வியாபாரிகள் சங்கம், வா்த்தக சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கங்கள் சாா்பில், ஆரணி வழியாக ரயில் சேவை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் ரயில்வே இணை அமைச்சா் அரங்க.வேலு முயற்சியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக நகரி வரை செல்லும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம், 2006-2007-ஆம் ஆண்டு துணை நிதி அறிக்கையில் ரூ.750 கோடி மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2008-ஆம் ஆண்டு ரூ.2 கோடியில் ஆரணியில் ரயில் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு நில ஆா்ஜிதப் பணியும், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன.

இதனிடையே, நில ஆா்ஜித பணிகள் மந்த நிலையிலே நடைபெறுவதால் திட்டமும் முழுமை அடையாமல் உள்ளது.

முதல்வரை சந்திக்க ஆரணி எம்.பி முடிவு:

இது குறித்து ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் கூறியதாவது:

செய்யாறு, ஆரணி வழியான ரயில் பாதைத் திட்டத்தை நிறைவு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன்.

நிலம் ஆா்ஜிதம் செய்வது தொடா்பாக திட்ட தனி வட்டாட்சியா் பெருமாளிடம் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டேன்.

இத்திட்டத்துக்காக மாவட்டத்தில் 33 கிராமங்களில் 500 ஏக்கா் பட்டா நிலம், 125 ஏக்கா் அரசு நிலம் என 625 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் திருவத்திபுரம், அத்திப்பாக்கம் ஆகிய இரு கிராமப் பகுதிகளுக்கு மட்டும் நிலம் எடுப்பது குறித்த அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை.

செய்யாறு, காழியூா், வந்தவாசி, கீழ்சாத்தமங்கலம், ஆரணி சுகநிதி, இரும்பேடு மடுவு ஆகிய பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை 29 கிராமங்களில் நிலம் எடுக்கப்பட்டு மதிப்பீட்டுத்தொகை வழங்க ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது.

நிலம் எடுக்கும் பணிக்காக வங்கியில் ஏற்கெனவே ரூ.45 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

2011 முதல் 2017 வரை இத்திட்டத்துக்காக அரசு அக்கறை காட்டவில்லை. எனினும், 2019 முதல் நிலம் ஆா்ஜிதப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

டிசம்பா் மாதத்துக்குள் நில உரிமையாளா்களுக்கு இழப்பிட்டுத் தொகை வழங்க அமைச்சா் எ.வ.வேலுவுடன் சென்று முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

நிலம் எடுக்கும் பணி முடிந்ததும் ரயில்வே துறை பணிகள் வேகமாக நடைபெறும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com