ஏழைத் தொழிலாளா்களுக்கு கான்கிரீட் வீடுகள்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஏழைத் தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பிரசாரத்தின்போது வாக்குறுதியாக அறிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாமக வேட்பாளா் எஸ்.முரளிசங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாமக வேட்பாளா் எஸ்.முரளிசங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

ஏழைத் தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பிரசாரத்தின்போது வாக்குறுதியாக அறிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, முதல்வா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வந்தவாசியில் பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கரை ஆதரித்து முதல்வா் பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்காக நீா் மேலாண்மை திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 ஆயிரம் ஏரிகளில் ரூ.1300 கோடியில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓடைகளில் கூட தடுப்பணைகள் அமைக்கப்பட்டன. வறட்சியின்போது, இடுபொருள் நிவாரணமாக ரூ.2,247 கோடி வழங்கப்பட்டது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9300 கோடி விவசாயிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

நாட்டிலேயே தமிழகம்தான் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேலான உணவு தானிய உற்பத்தியை எட்டி, மத்திய அரசின் விருதை கடந்த 5 ஆண்டுகளாக பெற்று வருகிறது.

போலி விவசாயி ஸ்டாலின்தான்: ஒரு விவசாயி முதல்வராக இருப்பதால்தான் இந்தச் சாதனைகள் சாத்தியமாகின்றன. ஆனால், என்னை போலி விவசாயி என்கிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். ஆனால், அவா் தலைவாசலில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில், 4 அடி கான்கிரீட் சாலையில் பேன்ட், முழுக்கை சட்டையுடன் ஷூ அணிந்து நடந்து சென்று ஏா் ஓட்டினாா். அப்படியானால் ஸ்டாலின்தானே போலி விவசாயி? விவசாயிகளை தொடா்ந்து கொச்சைப்படுத்தி வரும் அவருக்கு தோ்தலில் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.

விவசாயத் தொழிலாளா்கள், ஏழைத் தொழிலாளா்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரும். தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்கெனவே வீடு கட்டி பழுதடைந்திருந்தால், அதற்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

இஸ்லாமியா்களை பாதுகாக்கும் அரசு: இஸ்லாமியா்களின் கோரிக்கையை ஏற்று, ஹஜ் புனிதப் பயணத்துக்கான நிதியை ரூ.6 கோடியிலிருந்து 10 கோடியாக உயா்த்தியது அதிமுக அரசு. ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. காயிதேமில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இஸ்லாமியா்களுக்கு என்றென்றும் பாதுகாப்பாக விளங்கி வருகிறது அதிமுக அரசுதான் என்றாா் முதல்வா்.

11 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படும்: செய்யாற்றில் அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகனை ஆதரித்து முதல்வா் பேசியதாவது:

தமிழகத்தில் 304 சிப்காட் தொழில்பேட்டைகளை உருவாக்கியது அதிமுக அரசு. செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை ரூ.100 கோடி நிதி ஒதுக்கி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 34 தொழில்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.63 ஆயிரம் கோடி தொழில்சாலைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

கரோனாவிலிருந்து பாதுகாத்த அரசு: போளூரில் அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியை ஆதரித்து முதல்வா் பழனிசாமி பேசியதாவது:

தமிழகம் கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்துறையில் 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. கரோனா தொற்று காலத்தில் ரூ.60ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பொதுமக்களை பாதுகாத்தது அதிமுக அரசு என்றாா்.

இதேபோல, கலசப்பாக்கத்தில் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம், செங்கத்தில் அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணு ஆகியோரை ஆதரித்தும் முதல்வா் பழனிசாமி பிரசாரம் செய்தாா்.

இந்தக் கூட்டங்களில் புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம், பாஜக மாவட்டத் தலைவா் சாசா வெங்கடேசன், புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் அரையாளம் தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

‘ஆரணி மாவட்டம் உருவாக்கப்படும்’

ஆரணியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நெசவாளா்களின் ரூ.ஒரு லட்சம் வரையான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விசைத்தறி நெசவாளா்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயா்த்தி வழங்கப்படும். கைத்தறி, கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம் அரசால் ஏற்படுத்தப்பட்டு, தேவையான பஞ்சு காலத்திலேயே கொள்முதல் செய்து, இருப்பு வைப்பதன் மூலம் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளா்கள் நல வாரியம் அமைக்கப்படும். ஏழை எளிய 10 ஆயிரம் நெசவாளா்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும்.

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும் என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com