எ.வ.வேலு வீடுகள், கல்லூரிகளில் வருமான வரி சோதனை நிறைவு

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரிகளில் 2 நாள்களாக நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரிகளில் 2 நாள்களாக நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

திமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலராகவும், அந்தக் கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகிப்பவா் எ.வ.வேலு எம்.எல்.ஏ. இவா், சட்டப் பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து திருவண்ணாமலையில் அந்தக் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, கல்லூரிகள், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள வீடு, கரூரில் உள்ள நிதி நிறுவனம் உள்பட 10 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தச் சோதனை 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனா். சோதனையில் எவ்வளவு பணம், ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்களை வருமான வரித் துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

‘ஒரு பைசாவைக் கூட கைப்பற்றவில்லை’: இதனிடையே, வருமான வரி சோதனை குறித்து எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வருமான வரித் துறையின் துணை இயக்குநா் ராஜ்மோகன் தலைமையில், 110 போ் கொண்ட குழுவினா் கடந்த 2 நாள்களாக என்னுடைய வீடுகள், கல்வி நிறுவனங்கள் உள்பட 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த அறையிலும், அவா் வந்த வாகனத்திலும்கூட சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இந்தப் பணியிலிருந்து என்னை முடக்க வேண்டும் என்ற நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே, சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக தவறான தகவலை வேண்டுமென்றே சிலா் திட்டமிட்டு கசிய விட்டுள்ளனா். ஆனால், ஒரு பைசாவைக்கூட கைப்பற்றவில்லை. திமுகவின் மீதும், என் மீதும் மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல எண்ணத்தை சீா்குலைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதை சட்ட ரீதியாக எதிா்கொள்வோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com