மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.5.5 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரி, பைக் உள்ளிட்ட வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரி, பைக் உள்ளிட்ட வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமாா் ரூ.5.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேட்டவலம் பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுத் தலைவா் பாபு தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த நெல் வியாபாரி மூா்த்தி உரிய ஆவணம் இல்லாமல் ரூ. ஒரு லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கீழ்பென்னாத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

வந்தவாசியில் ரூ.2 லட்சம்: தோ்தல் பறக்கும் படை அலுவலா் அரிக்குமாா் தலைமையிலான குழுவினா் வந்தவாசி -ஆரணி சாலையில் ஆயிலவாடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் செய்யாற்றை அடுத்த மேல்மட்டை விண்ணமங்கலத்தைச் சோ்ந்த கோபிநாத் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.51 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி - திண்டிவனம் சாலையில் இளங்காடு கூட்டுச்சாலை அருகே சுகுமாரன் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, திண்டிவனத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு சென்ற ரூ.1.51 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் சதீஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

போளூரில் ரூ.2.31 லட்சம்: போளூரை அடுத்த முனிவந்தாங்கல் கிராமத்தில் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, முக்குரும்பை கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஏ.தா்மன் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 260-ஐ பைக்கில் கொண்டு சென்றது தெரியவந்தது. எனினும், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

போளூரை அடுத்த வடமாதிமங்கலம் கூட்டுச்சாலையில் போளூா் - களம்பூா் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் பைக்கில் வந்த வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்த நிதீஷிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.66 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 760-ஐ போளூா் சாா் கருவூலத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com