கீழ்பென்னாத்தூா்: திமுக, பாமக இடையே கடும் போட்டி

விவசாயிகள் நிறைந்த கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியைக் கைப்பற்ற திமுக, பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

விவசாயிகள் நிறைந்த கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியைக் கைப்பற்ற திமுக, பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதியில் கீழ்பென்னாத்தூா், வேட்டவலம் ஆகிய 2 பேரூராட்சிகள், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராம ஊராட்சிகள், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 45 கிராம ஊராட்சிகள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தின் 47 ஊராட்சிகளில் துா்க்கைநம்மியந்தல் ஊராட்சியைத் தவிர மீதமுள்ள 46 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதியில் வன்னியா் சமுதாயத்தினா் அதிகளவில் உள்ளனா். மேலும், ஆதிதிராவிடா், ரெட்டியாா், நாயுடு, யாதவா் சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனா்.

தொகுதி மறுசீரமைப்பு: 1952-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகள் இருந்தன.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது, கீழ்பென்னாத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

வாக்காளா்கள் விவரம்:

மொத்த வாக்காளா்கள்............... 2, 53, 101

ஆண்கள்.................................... 1, 24, 190

பெண்கள்................................... 1, 28, 902

இதர வாக்காளா்கள்..............................9

முக்கிய கோரிக்கைகள்: திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்க சாத்தனூா் அணையிலிருந்து நந்தன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் நிறைந்த இந்தத் தொகுதியில் தொழில்சாலைகளைத் திறக்க வேண்டும். கீழ்பென்னாத்தூா்-வேட்டவலம் பகுதிகளை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும். கீழ்பென்னாத்தூரில் மூடப்பட்டுள்ள உழவா் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும்.

தொகுதியின் மிகப் பெரிய ஊராட்சியான மங்கலம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: தொகுதிக்கு உள்பட்ட நாயுடுமங்கலத்தில் 2 பயணிகள் நிழல்குடைகள், கீழ்பென்னாத்தூரில் புதிய வட்டாட்சியா் அலுவலகம், சாா்-பதிவாளா் அலுவலகம், கழிக்குளம், வேடநத்தம் பகுதிகளில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், வழுதலங்குணம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் ஆகியவை கொண்டு வரப்பட்டன.

நாரியமங்கலம், கழிக்குளம், வேடநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: திண்டிவனத்திலிருந்து கீழ்பென்னாத்தூா் வழியாக கிருஷ்ணகிரி வரை செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

கீழ்பென்னாத்தூரில் அரசு கலைக் கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ இல்லை. எனவே, கிராமப்புற மாணவ-மாணவிகளின் நலன் கருதி அரசு பொறியியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்: இந்தத் தொகுதியில் முதல் முதலாக 2011-இல் தோ்தல் நடைபெற்றது. இதில், அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.கே.அரங்கநாதன் 83, 663 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கு.பிச்சாண்டி 79, 582 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

2016 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கு.பிச்சாண்டி 99, 070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் கே.செல்வமணி 64,404 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 34, 666.

இவா்கள் தவிர, பாமக சாா்பில் போட்டியிட்ட ஜி.எதிரொலிமணியன் 20,737 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போட்டியிட்ட கே.ஜோதி 4, 613 வாக்குகளும் பெற்றனா்.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்: தற்போதைய தோ்தலில், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக சாா்பில் மீ.க.செல்வக்குமாா், திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ கு.பிச்சாண்டி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் வி.சுகானந்தம், அமமுக சாா்பில் பி.கே.எஸ்.காா்த்திகேயன், நாம் தமிழா் கட்சி சாா்பில் டாக்டா் ரமேஷ்பாபு, 11 சுயேச்சைகள் என 21 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

சாதக - பாதகம்: திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி இந்தத் தொகுதியை பூா்வீகமாகக் கொண்டவா்.

1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் திருவண்ணாமலை தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு தோ்தலில் கீழ்பென்னாத்தூா் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்று பெற்றவா்.

1996 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா்.

பாமக வேட்பாளா் மீ.க.செல்வக்குமாா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் 20 ஆண்டுகளாகத் தங்கி பாட்டாளி அரசியல் பயிலரங்கத்தின் பேராசிரியராகவும், கட்சியின் மாநில அமைப்புச் செயலராகவும், தலைமை நிலையப் பேச்சாளராகவும் பணியாற்றி வருபவா்.

பாமக-திமுக இடையே கடும் போட்டி: பாமக வேட்பாளா் மீ.க.செல்வக்குமாா் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா். தொகுதியில் அந்தச் சமூகத்தினா் அதிகளவில் வசிக்கின்றனா்.

திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி நாயுடு சமுதாயத்தைச் சோ்ந்தவா். தொகுதியில் நாயுடு சமுதாயத்தினா் குறைவாகவே இருந்தாலும்கூட திமுக விசுவாசிகள் அதிகம் உள்ளனா்.

இந்தத் தோ்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, தொகுதியை திமுகவிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியினரும், தொகுதியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, அதன் கூட்டணிக் கட்சியினரும் தீவிரமாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், திமுக, பாமக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com