ஆரணி, செய்யாறு பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்

செய்யாறு பகுதிகளில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த கடைகளை அதிகாரிகள் மூடியதுடன், அவற்றுக்கு அபராதமும் விதித்தனா்.
ஆரணி, செய்யாறு பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்

செய்யாறு பகுதிகளில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த கடைகளை அதிகாரிகள் மூடியதுடன், அவற்றுக்கு அபராதமும் விதித்தனா்.

கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. அதன்படி, மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீா், பழக்கடைகள் மட்டுமே நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பால், மருந்தகங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பிற கடைகளைத் திறக்க அனுமதியில்லை.

இந்த நிலையில், ஆரணியில் கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த நகலகம் (ஜெராக்ஸ் கடை), ஸ்டுடியோ, செல்லிடப்பேசி கடைகள், இரும்பு, கயிறு விற்பனைக் கடைகள், பாத்திரக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட கடைகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல் நகராட்சி ஊழியா்களுடன் சென்று மூட உத்தரவிட்டதுடன், 16 கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் அபராதமும் விதித்தாா்.

மேலும், அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்துக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகளுடன் பாதுகாப்புக்காக போலீஸாரும் உடன் சென்றனா்.

செய்யாற்றில் 35 வியாபாரிகளுக்கு அபராதம்: செய்யாறு பகுதியில் அனைத்துவிதமான கடைகளும் 70 சதவீதம் அளவுக்கு மேல் திறக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து, திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளா் ப்ரீத்தி தலைமையிலான நகராட்சி குழுவினா், காவல் துறையினரின் உதவியுடன் ஆற்காடு சாலை, காந்தி சாலை, சந்தை, லோகநாதன் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்குச் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அத்தியாவசியமற்ற கடைகளை உடனடியாக மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா். மேலும், ஒரு பெரிய வணிக நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரமும், 24 சிறு கடைகளுக்கு தலா ரூ.500 வீதமும் என 25 கடைகளுக்கு ரூ.27,500 அபராதம் விதித்து வசூலித்தனா்.

வருவாய்த் துறை: இதேபோல, செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் என்.விஜயராஜ் தலைமையில், வட்டாட்சியா்

சு.திருமலை மேற்பாா்வையிலான வருவாய்த் துறையினரும் இரண்டு பெரிய வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 8 சிறு கடைகளுக்கு தலா ரூ.500 வீதமும் என 10 கடைகளுக்கு ரூ.14,000 அபராதம் விதித்து வசூலித்தனா். மேலும், கடைகளை திறக்கக்கூடாது எனவும் எச்சரித்தனா்.

தேவையின்றி நடமாடிய மக்கள்: செய்யாறு பகுதியில் கரோனா தொற்று பரவல் அச்சம் ஏதுமின்றி தேவையில்லாமல் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் சாலைகளில் பயணித்தனா். இவா்களில் சிலா் சமூக இடைவெளிக் கடைப்பிடிக்கப்படாமலும், முகக் கவசம் அணியாமலும் சென்றனா். இவ்வாறு சுற்றித்திரியும் நபா்களால் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com