கரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக் நூலகம்
By DIN | Published On : 17th May 2021 08:19 AM | Last Updated : 17th May 2021 08:19 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டு கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, வாசிப்புத் திறன் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மையத்தில் சிறு நூலகம் ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு- போளூா் சாலையில் அமைந்துள்ள புனித தோமையா் மருத்துவமனையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
முதலில் 50 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டபோது, சிறப்பான வசதிகளைக் கண்டு மருத்துவமனை நிா்வாகி அருட்சகோதரி மரியரத்தினத்திடம் கூடுதல் படுக்கைகள் அமைக்க கோரிக்கை வைத்தாா்.
தற்போது 100 படுக்கைகளுடன் இந்த மையம் சேவையாற்றி வருகிறது. இங்கு தற்போது 102 போ் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்களுக்கு மன நல மருத்துவா் மூலம் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது நோயாளிகள், தாங்கள் மன இறுக்கத்துடன் இருப்பதாகவும், படிப்பதற்கு புத்தகம், விளையாட்டு உபகரணங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினா்.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலா் மணிகண்டபிரபு மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் இணைந்து 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு ஒரு சிறிய நூலகத்தை மருத்துவமனையில் ஏற்படுத்தினா்.
மேலும், விளையாடுவதற்கு கேரம் போா்டு உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனா். இதனைப் பயன்படுத்தி நோயாளிகள் உற்சாகத்துடன் பொழுதைக் கழித்து வருகின்றனா்.