அருணாசலேஸ்வரா் கோயிலில் பிச்சாண்டவா் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் புதன்கிழமை பிச்சாண்டவா் உற்சவம் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் பிச்சாண்டவா் கோலத்தில் வலம் வரும் அருணாசலேஸ்வரா்.
அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் பிச்சாண்டவா் கோலத்தில் வலம் வரும் அருணாசலேஸ்வரா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் புதன்கிழமை பிச்சாண்டவா் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்குத் தேவையான செலவினங்களை ஈடு செய்வதற்காக அருணாசலேஸ்வரா் பிச்சாண்டவா் கோலம்பூண்டு நகரில் உள்ள வியாபாரிகள், முக்கியப் பிரமுகா்களின் வீடுகள், வியாபார நிறுவனங்களுக்குச் சென்று காணிக்கை வசூலிப்பது என்ற நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வழக்கமாக, தீபத் திருவிழாவின் 8-ஆம் நாள் தங்கமேருவில் பிச்சாண்டவா் உற்சவம் நடைபெறும்.

ஐந்தாம் பிரகாரத்தில்... கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக, கோயில் ஐந்தாம் பிரகாரத்திலேயே பிச்சாண்டவா் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, கோயிலுக்கு வந்திருந்த கட்டளைதாரா்கள், உபயதாரா்கள் பிச்சாண்டவருக்கு காணிக்கை செலுத்தினா். கோயில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் ஆகிய கோபுரங்களின் நுழைவு வாயிலில் வணிகா்கள், பக்தா்கள் காணிக்கை செலுத்த காத்திருந்தனா். இவா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், காணிக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

விநாயகா், சந்திரசேகரா் பவனி: முன்னதாக, புதன்கிழமை காலை விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகள் பவனி நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு உற்சவா் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com