திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை காா்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மகா தீபக் கொப்பரை.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மகா தீபக் கொப்பரை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாளை மகா தீபத் திருவிழா: விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வெள்ளிக்கிழமை (நவ.19) ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள மலையில் மகா தீபமும் ஏற்றப்படும். முன்னதாக, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இரவு 10 மணிக்கு பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி, கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வருகின்றனா்.

ஏற்பாடுகள் தீவிரம்: தீபத் திருவிழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது. கோயில் வளாகத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா், வேலூா் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, உதவி காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோா் புதன்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

5 ஆயிரம் போலீஸாா் குவிப்பு: திருவண்ணாமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக சுமாா் 5 ஆயிரம் போலீஸாா் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனா்.

கொப்பரை, நெய், காடாதுணி தயாா்: மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 500 கிலோ நெய், தீபம் எரிவதற்கு திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி ஆகியவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வியாழக்கிழமை (நவம்பா் 18) காலை மலை மீது எடுத்துச் செல்லப்படும். வெள்ளிக்கிழமை (நவ.19) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

பக்தா்களுக்கு அனுமதி இல்லை: புதன்கிழமை (நவ.17) பிற்பகல் ஒரு மணி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. பரணி தீபம், மகா தீபத்தைக் காணவும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயில் ஊழியா்கள், கட்டளைதாரா்கள், உபயதாரா்கள், சிவாச்சாரியா்கள், காவல் துறையினா், வருவாய்த் துறையினா், பத்திரிகையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com