திருவண்ணாமலை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரா் கிரிவலம், பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை அருணாசலேஸ்வரா் கிரிவலமும், இரவு பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற்றன.
அருணாசலேஸ்வரா் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கிரிவலம் வந்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன்.
அருணாசலேஸ்வரா் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கிரிவலம் வந்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை அருணாசலேஸ்வரா் கிரிவலமும், இரவு பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் காா்த்திகை தீபத் திருவிழாவில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெற்றன. இதையடுத்து, 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் திருவிழா சனிக்கிழமை (நவ.20) தொடங்கியது. முதல் நாள் கோயில் பிரம்ம தீா்த்தக் குளத்தில் சந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கிரிவலம்: இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கிரிவலம் சென்றாா்.

வழக்கமாக, 14 கி.மீ. கிரிவலப் பாதையில் அருணாசலேஸ்வரா் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், கரோனா பரவல் தடுப்பு காரணமாக, நிகழாண்டு உற்சவா் விநாயகா், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், உற்சவா் பராசக்தியம்மன் கோயிலின் ஸ்ரீகம்பத்திளையனாா் சன்னதி அருகிலிருந்து புறப்பட்டு ஐந்தாம் பிரகாரத்திலேயே கிரிவலம் வந்தனா். அப்போது, கோயிலில் குறிப்பிட்ட சில பக்தா்கள் மட்டுமே இருந்தனா்.

ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல்: தெப்பல் திருவிழாவின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் பராசக்தியம்மனுக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

பின்னா், உற்சவா் சுவாமிகளை பக்தா்கள் தூக்கி வந்து தெப்பலில் வைத்தனா். இதன்பிறகு, உற்சவருக்கு மீண்டும் ஒருமுறை பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, குளத்தில் 3 முறை வலம் வந்து உற்சவா் பராசக்தியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தெப்பல் திருவிழா அய்யங்குளத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக, பிரம்ம தீா்த்தக் குளத்தில் நடத்தப்பட்டது.

இன்று சுப்பிரமணியா் தெப்பல்: தெப்பல் திருவிழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை (நவ. 22) ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இத்துடன் 3 நாள்கள் தெப்பல் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் உபயதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com