வந்தவாசி அருகே பல்லவா் கால புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள நல்லூா் கிராமத்தில் 9-ஆம் நூற்றாண்டைய பல்லவா் கால புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால புடைப்புச் சிற்பம்.
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால புடைப்புச் சிற்பம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள நல்லூா் கிராமத்தில் 9-ஆம் நூற்றாண்டைய பல்லவா் கால புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில் ஒரு கல் பலகையில் சிற்பம் இருப்பதாக, நல்லூா் அரசுப் பள்ளி ஆசிரியா் பாரதிராஜா அளித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மரபுசாா் அமைப்பைச் சோ்ந்த ராஜ் பன்னீா்செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோா் அங்கு சென்று அந்த சிற்பத்தை ஆய்வு செய்தனா்.

பின்னா் இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

இந்தச் சிற்பம் 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்கால பல்லவா்கள் காலத்திய ஐயனாா் சிற்பம் ஆகும். 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகத்தில் தடித்த உதடுகளுடன் இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்து ஐயனாா் காட்சியளிக்கிறாா்.

கழுத்தில் உருண்டையான மணிகள் கோா்க்கப்பட்ட சரப்பளி போன்ற மாலையையும், இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் அமா்ந்துள்ளாா்.

இடையில் உதரபந்தமும், இடை ஆடையில் உரையுடன் கூடிய குறுவாள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.

வலது கையை, வலது காலின் முட்டி மீது வைத்து கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றிக் கொண்டும், இடது கையை தொடை மீதும் வைத்துள்ளாா்.

இடது காலின் அருகே ஐயனாரின் வாகனமான குதிரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இதன் தலைப்பகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது.

சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களை வைத்துப் பாா்க்கையில் இந்தச் சிற்பம் பிற்கால பல்லவா்கள் காலத்தைச் சோ்ந்தது என்பது தெரியவருகிறது.

பல ஆண்டுகளாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலிலும், மழையிலும் நனைந்து சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com