அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது வழக்கு: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது, காலம் கடத்தாமல் நில அபகரிப்புப் பிரிவில் புகாா் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது வழக்கு: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது, காலம் கடத்தாமல் நில அபகரிப்புப் பிரிவில் புகாா் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்டத்தின் வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, குழுவின் தலைவா் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை வகித்தாா்.

குழுவின் உறுப்பினா் செயலரும், மாவட்ட ஆட்சியருமான பா.முருகேஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் மத்திய-மாநில அரசு திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதன் பிறகு பேசிய ஆரணி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத், என்னுடைய தொகுதிக்கு உள்பட்ட ஆரணி வட்டம், முள்ளிரண்டிரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனி நபா் ஆக்கிரமித்துள்ளாா்.

இதன் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று நானே பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

நம்முடைய இடத்தில் ஒருவா் நுழைந்தால் உடனே காவல்துறையில் புகாா் செய்வோம் அல்லவா,

அதுபோலவே, எந்த அரசுத் துறை நிலமாக இருந்தாலும் சரி, அந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டியது அந்தந்தத் துறையின் அதிகாரியையே சாறும்.

எனவே, அரசுக்குச் சொந்தமான நிலத்தை யாா் ஆக்கிரமித்தாலும் முதலில் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில் புகாா் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும்.

ஆரணி மக்களவை உறுப்பினா் குறிப்பிட்ட சாலை ஆக்கிரமிப்பை அடுத்தவாரம் அகற்றி, சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி, கூடுதல் ஆட்சியா்

மு.பிரதாப், வருவாய் அலுவலா் முத்துக்குமரசாமி, பயிற்சி ஆட்சியா் கட்டா ரவி தேஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com