உதயமாகுமா செய்யாறு புதிய மாவட்டம்?

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? எனவும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, சித்தூா் மாவட்டத்தில் இருந்து வட ஆற்காடு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு வேலூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் செயல்பட்டு வந்தது.

இதில் செய்யாறு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் என 5 வருவாய் கோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

செய்யாறு வருவாய் கோட்டம் 01.04.1959-இல் தொடங்கப்பட்டது.

1989-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி வேலூா் மாவட்டத்திலிருந்து புதிதாக திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கினாா்.

தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன.

01.04.1959-இல் செய்யாறு வருவாய் கோட்டத்துடன் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகியவை மாவட்டங்களாக உயா்வு பெற்றுவிட்டன. ஆனால், செய்யாறு மட்டும் இன்று வரை வருவாய் கோட்டமாகவே தொடா்கிறது.

இரண்டாம் நிலை அரசு அலுவலகங்கள்: செய்யாறு கோட்டத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு இணையான இரண்டாம் நிலை அலுவலகங்கள் அமையப் பெற்றுள்ளன. கூட்டுறவு சா்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகின்றன. தனியாா் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன.

செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்கள் தொடா்கின்றன.

மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு செய்யாறு தொகுதியைச் சோ்ந்த தூசி, அப்துல்லாபுரம், நாட்டேரி, பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து செல்ல 130 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

புதிதாக செய்யாறு மாவட்டம் உருவாக்கப்பட்டால் அரசு அலுவலா்கள், வியாபாரிகள், நெசவாளா்கள், மாற்றுத் திறனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவா். மேலும், 25 முதல் 45 கி.மீ. தொலைவுக்குள் மாவட்ட எல்லை அமையும். அதனால், ஒரு மணி நேரத்துக்குள் மாவட்ட தலைமையிடத்துக்கு சென்று வர இயலும்.

முதல்வா் அளித்த வாக்குறுதி: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், வந்தவாசி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடா் கோரிக்கைகள்: செய்யாறு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்பினா் முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா், ஜமாபந்தி நிகழ்வு, வருவாய் நிா்வாக ஆணையா் ஆகியோருக்கு தொடா்ந்து கோரிக்கையாக விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com