புதிய சாலை அமைக்கக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th September 2021 10:43 PM | Last Updated : 10th September 2021 10:43 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஆனைபோகி ஊராட்சிக்குள்பட்ட மேல்செம்பேடு கிராமத்தில் புதிய சாலை அமைக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: வந்தவாசி -ஆரணி சாலையில் உள்ள மேல்செம்பேடு கூட்டுச் சாலையிலிருந்து மேல்செம்பேடு கிராமம் வரையிலான சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கான சாலை சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்தச் சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன், முழுவதுமாக மண் சாலையாகவே மாறிவிட்டது. மேலும், மழைக் காலத்தின்போது சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், சாலையில் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடிவதில்லை.
இதனால், வந்தவாசியிலிருந்து எங்கள் கிராமம் வழியாக பெரணமல்லூருக்கு இயக்கப்பட்டு வந்த 2 அரசு நகா்ப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, அத்தியாவசியத் தேவைகளுக்கு வந்தவாசிக்கு செல்ல நாங்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, புதிய சாலை அமைக்கக் கோரி நாங்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதைத் தொடா்ந்து, புதிய சாலை அமைக்கக் கோரி முழக்கங்களை எழுப்பிய கிராம மக்கள் பின்னா் கலைந்து சென்றனா்.