ஆரணியில் சிறப்பு அஞ்சல் உறை அறிமுக விழா
By DIN | Published On : 11th September 2021 11:10 PM | Last Updated : 11th September 2021 11:10 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட, அதைப் பெற்றுக்கொள்ளும் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆா்.அமுதா.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு அஞ்சல் உறை அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி பட்டு சேலையை பெருமைப்படுத்தும் வகையில், சிறப்பு அஞ்சல் உறை தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ஆம் தேதி முதன்மை அஞ்சல் வட்ட அதிகாரியால் சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இதன் அறிமுக விழா ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆா்.அமுதா தலைமை வகித்தாா். உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் ம.காா்த்திகேயன் வரவேற்றாா்.
தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அஞ்சல் உறையை அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா்.
அப்போது அவா், ஆரணி பட்டு சேலைக்கு புகழ்பெற்ற நகரமாகும். ஆகையால், பட்டு சேலை வடிவமைப்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அமுதா என்னிடம் அதற்கான கட்டணத்தொகையை அஞ்சல் துறைக்கு செலுத்தவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தாா்.
இதையடுத்து, ஆரணியில் உள்ள பட்டு சேலை உற்பத்தியாளா்களை அழைத்துப் பேசி அதற்கான தொகையை பெற்றுத் தந்தேன்.
தபால் உறையின் மீது ஆரணி நெசவுத் தொழிலை சிறப்பிக்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், ஆரணிக்கு காந்தியடிகள் வருகை தந்தபோது, பட்டுநூலை ராட்டினத்தில் சுற்றினாா்.
அந்த ராட்டினத்தின் படமும் இதில் இடம் பெற்றிருப்பது ஆரணிக்கு மேலும் ஒரு சிறப்பாகும் என்றாா் சேவூா் ராமச்சந்திரன்.
இதைத் தொடா்ந்து, சிறப்பு அஞ்சல் உறை வெளியிட உதவிய பட்டு சேலை உற்பதியாளா்கள் கப்பல் இ.கங்காதரன், கே.ஆா்.சண்முகம், டி.சி.ராமலிங்கம், ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன், ராஜேந்திரன், வழக்குரைஞா் ரேணுகாகங்காதரன், சேகா், செல்வராசு, எஸ்.பி.சரவணன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட மீனவரணிச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் அஞ்சலக அதிகாரி ஜி.மணி நன்றி கூறினாா்.