திருவண்ணாமலையில் மருத்துவரை கைது செய்யக்கோரி 2-ஆவது நாளாக சாலை மறியல்

திருவண்ணாமலை தனியாா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில்,

திருவண்ணாமலை தனியாா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தனியாா் மருத்துவமனை மருத்துவரை கைது செய்யக்கோரி, உயிரிழந்த பெண்ணின் உறவினா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி ராஜகுமாரி (35). அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவா், திருவண்ணாமலை - செங்கம் சாலை, பே கோபுர பிரதான சாலையில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு ராஜகுமாரியைப் பரிசோதித்த சிறப்பு மருத்துவா், கா்பப்பையில் உள்ள கட்டியை அகற்றினால் உடல்நிலை சரியாகிவிடும் என்றாராம். அதன்படி, திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்தபோது, பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானதாம். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகுமாரி, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக, அவரது உறவினா்கள் தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டும், திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை எதிரே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலையில் அமா்ந்து ராஜகுமாரியின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தச் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜகுமாரியின் உறவினா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்ததால், அவா்கள் கலைந்து சென்றனா்.

வழக்குப் பதிவு, விசாரணை தொடக்கம்: ராஜகுமாரி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அதே நேரத்தில் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி தலைமையிலான மருத்துவக் குழுவினரும் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com