நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மண்டகொளத்தூா் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்த நெல் மூட்டைகளை

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மண்டகொளத்தூா் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்த நெல் மூட்டைகளை எடைபோட எடுக்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மண்டகொளத்தூா் ஊராட்சியில் இயங்கும் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்துக்கு மண்டகொளத்தூா், மொடையூா், பெரணம்பாக்கம், அரும்பலூா், கொம்மனந்தல், கரைப்பூண்டி, அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம் என பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல் மணிகளை சான்று பெற்று பதிவு செய்து, விற்பனைக்காக எடுத்து வருகின்றனா்.

அவ்வாறு எடுத்து வரும் நெல்லில் கருப்பு நிறம் கொண்ட நெல் உள்ளது. மேலும், நெல்லில் மாவு போன்ற பவுடா் உள்ளது எனக் கூறி, மூட்டைகளை எடை போட முடியாது என வசூல் அதிகாரி தெரிவித்தாராம்.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் குமாரி அமாவாசை வந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் பேசி சமாதானம் செய்து எடை போட வைத்தாா்.

இதுகுறித்து மாவட்ட மண்டல மேலாளா் பழனியிடம் கேட்டபோது, விவசாயிகள் புதிதாக அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் பழைய நெல் மூட்டைகளை கலந்து எடுத்து வந்து எடை போடுகின்றனா்.

பழைய நெல் மூட்டைகளில் நெல் மணிகளை வண்டு துளைத்ததால் மாவு வந்துள்ளது. அரசு இதுபோன்ற நெல் மூட்டைகளை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

புதிதாக அறுவடைசெய்த நெல்லை தங்கு தடையின்றி எடுத்துக் கொள்கிறோம் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com