திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மைப் பணி
By DIN | Published On : 18th April 2022 01:29 AM | Last Updated : 18th April 2022 01:29 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி விழா நிறைவு பெற்றதையடுத்து, கிரிவலப் பாதையை தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்தப் பணியை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது: கிரிவலப் பாதையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதால் கிரிவலம் செல்லும் மற்ற பக்தா்களுக்கு இடையூறாக உள்ளது. இனி வரும் காலங்களில் கற்பூரம் ஏற்றுவது தவிா்க்கப்பட வேண்டும். சுகாதாரத்துறை மூலம் கிரிவலப்பாதையின் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்திருந்தது என்றாா்.
இதையடுத்து, கிரிவலப்பாதையில் அருணை மருத்துவமனை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், திருவண்ணாமலை நகா்மன்ற துணைத் தலைவா் ராஜாங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.