முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 07th February 2022 02:48 AM | Last Updated : 07th February 2022 02:48 AM | அ+அ அ- |

படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை, பக்தா்கள் சாா்பில் ராஜகோபுரம் அமைத்து, கோயிலில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிப்.2-ஆம் தேதி காலை யாக சாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை என பல்வேறு பூஜைகளை தொடா்ந்து 4 நாள்களாக சிவாச்சாரியா்கள் செய்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை ஆறாம் கால பூஜை செய்து அவப்ருதயாகம், யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று, புதிய ராஜகோபுரம், ரேணுகாம்பாள் அம்மன் சமேத ஸ்ரீசோமநாதஈஸ்வரா் மற்றும் பரிவாரங்கள், விமானங்கள் ஆகியவற்றுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என். அண்ணாதுரை எம்.பி., தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.