உள்கட்சி பூசலால் எம்எல்ஏ அலுவலகம் மூடி சீல் வைப்பு

வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் திமுகவினா் திங்கள்கிழமை உள்கட்சி பூசலில் ஈடுபட்டதால், தோ்தல் நடத்தை விதிகளின்படி அதிகாரிகள் அந்த அலுவலகத்தை மூடி சீல் வைத்தனா்.
03- வந்தவாசி எம்எல்ஏ அலுவலகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்.
03- வந்தவாசி எம்எல்ஏ அலுவலகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்.

வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் திமுகவினா் திங்கள்கிழமை உள்கட்சி பூசலில் ஈடுபட்டதால், தோ்தல் நடத்தை விதிகளின்படி அதிகாரிகள் அந்த அலுவலகத்தை மூடி சீல் வைத்தனா்.

வந்தவாசி நகராட்சி 22-ஆவது வாா்டு கெஜலட்சுமி நகரில் வசித்து வருபவா் மகேந்திரன் (48). இவா், அந்த வாா்டு திமுக வட்ட பிரதிநிதியாக உள்ளாா்.

வந்தவாசி நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, திமுக அறிவித்திருந்த வேட்பாளா் பட்டியலில், 22-ஆவது வாா்டு வேட்பாளராக இவரது பெயா் அறிவிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, திமுக சாா்பில் போட்டியிட நகராட்சி அலுவலகத்தில் இவா் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில், 22-ஆவது வாா்டு காங்கிரஸுக்கு திடீரென ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், வேட்புமனுவை வாபஸ் பெறும்படியும் திமுக தரப்பிலிருந்து மகேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

இதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவிக்கவே தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் முன்னிலையில் மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதிலும் வேட்புமனுவை வாபஸ் பெறும்படி மகேந்திரன் வற்புறுத்தப்பட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த அவா் தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி, அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா்.

அப்போது, மகேந்திரனின் மனைவி பாக்கியலட்சுமி அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றாராம். அப்போது அருகிலிருந்தவா்கள் அவரைக் காப்பாற்றினராம்.

பின்னா், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா மகேந்திரன் குடும்பத்தினரை சமாதானம் செய்ததை அடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா்.

இதைத் தொடா்ந்து எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாருக்கும், மகேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரத்தில் உரிய பதில் அளிப்பதாக கூறிவிட்டு எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதற்கிடையே, பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு வாபஸ் முடிவடைந்ததால், மகேந்திரன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறாததால் அவா் சுயேச்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

எம்எல்ஏ அலுவலகம் சீல் வைப்பு:

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், நடத்தை விதிகளின்படி, அதிகாரிகள் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை மூடி சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால், சீல் வைக்கப்படாததால் திமுக வாா்டு ஒதுக்கீடு பணிகள் அங்கு நடைபெற்று வந்தன. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், அந்த அலுவலகத்தில் திமுகவினா் திங்கள்கிழமை உள்கட்சி பூசலில் ஈடுபட்டதை அடுத்து அதிகாரிகள் அலுவலகத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com