வெம்பாக்கம் அருகே சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டு இருந்தப் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதத்தின் காரணமாக சலசலப்பு ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெற்ற ராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெருவிழாவில் பேசிய சீமான்.
பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெற்ற ராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெருவிழாவில் பேசிய சீமான்.

செய்யாறு:  திருவண்ணாமலை மாவட்டம்  வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேந்திர சோழன் பெருவிழா வியாழக்கிழமை மாலைக் கொண்டாடப்பட்டது.  அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டு இருந்தப் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதத்தின் காரணமாக சலசலப்பு ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.  

பிரம்மதேசம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சிக் கொடியினை ஏற்றி வைக்க முயன்று உள்ளனர். அப்போது கிராம மக்கள் சார்பில் இக்கிராமத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் இப்பகுதியில் கட்சிக் கொடியினை ஏற்றக் கூடாது வாக்குவாதம் செய்து எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பெரு விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வரலாறு தான் வழிகாட்டும். வரலாறு படித்தால் தான் வரலாறு படைக்க முடியும். வரலாறு என்பது வார்த்தையல்ல, வருங்கால தலைமுறையின் வழித்தடம். பாண்டியர்களுக்கும், சோழருக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக வஞ்சகத்தால் ஆதித்ய கரிகாலன் என்னும் நம் பெரும் பாட்டன் வீழ்த்தப்பட்டார். 

சேர, சோழ, பாண்டியர்கள் சேர்ந்து ஒன்றாக இருந்து இருந்தால் உலகத்தில் ஒரு நாடும் வேற யார் கையில் இருந்திருக்காது. நம்மிடம் தான் இருந்திருக்கும். ஆனால் இது சொந்த ரத்தங்களுக்குள் நடந்த யுத்தம் என்று சீமான் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது வரலாறு சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும் என்றும், அரசியல் சார்ந்த எதையும் பேசக் கூடாது என்றும், அதற்கு காவல் துறை அனுமதிக்கக் கூடாது என செய்யாறு டி.எஸ்.பி.செந்தில் மற்றும் காவல் துறையினர் கிராம மக்கள் பலர் வாக்குவாதம் செய்தனர். 
அதன் காரணமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பிரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. 

மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாக இரு தரப்பினரும் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். கூட்டத்தில் தொடர்ந்து  சீமான் பேசிக் கொண்டு இருந்ததால், அவர் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். சீமான் தொடர்ந்து பேசியதால்  
ஆத்திரமடைந்த கிராம மக்கள் விழா மேடையை நோக்கி முன்னேறிச் சென்றதால் பெரும் பதட்டமான சூழநிலை நிலவியது. பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர்  இரு தரப்பினரையும் தடுத்து விலக்கியனுப்பினர். 

இருப்பினும் இளைஞர்கள் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் மற்றும் கட்சிக் கொடிகளை பிடுங்கி சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடி மற்றும் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திச் சென்றனர். 

இந்நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை உருவான நிலையில், அக்கிராமத்தில் திடீரென அதிக அளவில் மழை பெய்தததால் இருதரப்பினரும் அங்கிருந்த கலைந்துச் சென்றனர். மழையானது தொடர்ந்து, அதிக அளவில் பெய்யத் தொடங்கியவுடன், கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். 

காரில் சென்ற சீமானை மாவட்ட எல்லை பகுதி வரை செய்யாறு டி.எஸ்.பி செந்தில்  தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com