போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் பைக் மோதி காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் பைக் மோதி காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலை போலீஸாா் குடும்பத்தினருக்கு தெரிவிக்காததைக் கண்டித்து கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தரணிகுமாா் (31). இவருக்கு திருமணம் நடைபெற்று சுகன்யா (27) என்கிற மனைவியும்,

ஒன்றரை வயதில் லக்ஷன் என்கிற மகனும், தினேஷ் என்கிற 6 மாதக் குழந்தையும் உள்ளனா்.

சென்னை சுங்குவாா்சத்திரம் பகுதி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தரணிகுமாா், தினசரி இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெள்ளேரி அருகே பக்கிரிதா்கா பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்தே வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அதுபோல, கடந்த 3-ஆம் தேதி வேலை முடிந்து அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிள் மோதியதில் தரணிகுமாா் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் பேரில், போலீஸாா் தரணிகுமாா் வீட்டுக்கு எதுவும் தெரிவிக்கவில்லையாம். மேலும் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் தகவல் அளிக்கவில்லையாம்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக தரணிகுமாா் வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இறந்த பிறகுதான் அவரது வீட்டுக்கும், கிராம மக்களுக்கும் தெரியவந்தது.

இதனால், போலீஸாரைக் கண்டித்து வெள்ளேரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆரணி - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், கிராமிய உதவி ஆய்வாளா் ஷாபுதீன் மற்றும் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.

அப்போது டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், விபத்துக்கு காரணமான நபரை கைது செய்வோம், நிவாரண உதவியாக ரூ.ஒரு லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வோம் என உறுதியளித்தாா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com