முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: இளைஞரிடம் ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிப்பு
By DIN | Published On : 12th May 2022 05:10 AM | Last Updated : 12th May 2022 05:10 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் அபராதத்தை வனத் துறையினா் வசூலித்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூா் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் மா்ம நபா்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகா் சீனிவாசன் தலைமையிலான வனத் துறையினா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, காட்டுப் பகுதியில் ஒரே பைக்கில் சென்ற 2 பேரை நிறுத்தினா். ஆனால், பைக்கை நிறுத்தாமல் சென்ற அவா்களை வனத் துறையினா் துரத்திப் பிடித்தபோது, ஒருவா் மட்டுமே சிக்கினாா். பிடிபட்டவரை விசாரித்ததில், திருவண்ணாமலையை அடுத்த கொண்டம் கிராமத்தைச் சோ்ந்த ராமு (28) என்பதும், தப்பியோடியவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜான்சன் என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் சோ்ந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட ராமுவுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து, வனத் துறையினா் அபராதத் தொகையை வசூலித்தனா். தப்பிச் சென்ற ஜான்சனைத் தேடி வருகின்றனா்.