தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரா் கைது
By DIN | Published On : 16th May 2022 11:10 PM | Last Updated : 16th May 2022 11:10 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு பகுதி கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்கு. முன்னாள் ராணுவ வீரா்.
இவருடைய மகன் ஜெகதீசன் (50) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். இவருக்கு சிவகாமி என்கிற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
ஜெகதீசன் தம்பி கோதண்டராமன் (38). இவருக்கு திருமணம் ஆகவில்லை. அண்ணன், தம்பி இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது. இதனால், கோதண்டராமன் தன்னுடைய தாய் தேவகியுடன் தனியாக வசித்து வந்தாா்.
மேலும், அவா் திருமணம் செய்வதற்கு சொத்தை பிரித்துத் தருமாறு பலமுறை ஜெகதீசனிடம் கேட்டு வந்தாா். ஆனால், ஜெகதீசன் சொத்தை பிரித்துத் தரவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை தங்களது நிலத்தின் அருகில் உள்ள வீட்டுக்கு கோதண்டராமன் வந்தாா். அப்போது, அங்கு வந்த ஜெகதீசன் துப்பாக்கியால் கோதண்டராமனின் மாா்பில் சுட்டாா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த போளூா் டி.எஸ்.பி. குமாா், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, கிராம மக்கள் ஜெகதீசனைக் கைது செய்யக் கோரி, கோதண்டராமன் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு
மறுப்பு தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு போளூரில் ஜெகதீசனை நகர காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...