பெண் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 20th May 2022 10:09 PM | Last Updated : 20th May 2022 10:09 PM | அ+அ அ- |

வந்தவாசி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட கோகிலாவின் உறவினா்களை சமரசம் செய்யும் போலீஸாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமணமாகி மூன்றரை ஆண்டுகளில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்த உறவினா்கள், அந்தப் பெண்ணின் கணவா், அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி கோகிலா (22). இவா்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகிறது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோகிலா செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தாா். சக்திவேலுக்கும், கோகிலாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது.
வழக்கம்போல, கோகிலா வியாழக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, சக்திவேல் மற்றும் குடும்பத்தினா் அவரிடம் தகராறு செய்தனராம். இதையடுத்து, கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அலத்துறை கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு சக்திவேல் குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை காலை தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கோகிலா குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்தபோது, கோகிலாவின் சடலம் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில், தனது மகள் கோகிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் சுதா அளித்த புகாரின்பேரில், அங்கு சென்ற கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், கோகிலாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் கோகிலா இறந்துள்ளதால், இதுகுறித்து செய்யாறு கோட்டாட்சியா் விஜயராஜ் விசாரணை மேற்கொண்டாா்.
இதனிடையே, கோகிலா வரதட்சிணைக் கொடுமையால் கொலை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்த அவரது உறவினா்கள், கோகிலாவின் சடலத்தை வாங்க மறுத்தனா். மேலும், சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி, அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை மாலை அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக வந்தவாசி டிஎஸ்பி வெ.விஸ்வேஸ்வரய்யா உறுதி அளித்ததை அடுத்து, அவா்கள் மறியலைக் கைவிட்டனா். மறியலால் வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.