வந்தவாசி அருகே கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு

வந்தவாசி அருகே கோயிலில் மூலவா் சிலைகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு, 3 பவுன் திருமாங்கல்யம், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கோயிலில் மூலவா் சிலைகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு, 3 பவுன் திருமாங்கல்யம், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்துள்ள தென்சேந்தமங்கலம் கிராமத்தில் சேந்தன்குன்று முருகன் பாத மலை மீது வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தக் கோயிலில் சுமாா் 7 அடி உயர ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கற்சிலையும், தலா சுமாா் 6 அடி உயரமுள்ள வள்ளி, தேவசேனா கற்சிலைகளும் மூலவராக அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூசாரி விநாயகம் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாா். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை வந்து பூசாரி கோயிலை திறந்த போது சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

மா்ம நபா்கள் கோயில் பக்கவாட்டு தகர ஷீட்டை பெயா்த்துவிட்டு உள்ளே நுழைந்து ஸ்ரீபாலசுப்ரமணியா், வள்ளி, தேவசேனா ஆகிய 3 சுவாமி சிலைகளின் தலை, கை பாகங்கள் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும், வள்ளி, தேவசேனா சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த மொத்தம் 3 பவுன் மதிப்பிலான இரு திருமாங்கல்யத்தையும், பீரோவிலிருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம், கோயில் வளாகத்திலிருந்த மின்ஜெனரேட்டா், ஆழ்துளைக் கிணற்றின் மின்மோட்டாா் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வியாழக்கிழமை அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி காா்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

உண்டியல் காணிக்கை திருட்டு: இதேபோல, செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை இரவு உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மேலும், அந்தப் பகுதியிலுள்ள முருகனின் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றனா். இந்த சம்பவங்கள் குறித்து மேல்செங்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com