செவிலியரிடம் நகை பறித்த இருவா் கைது
By DIN | Published On : 09th September 2022 10:52 PM | Last Updated : 09th September 2022 10:52 PM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட லோகநாதன், வினோத்குமாா்.
வந்தவாசி அருகே செவிலியரிடம் நகை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தெள்ளாரை அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி(58). இவா், தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த மாதம் பணியை முடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பைக்கில் இவரை பின்தொடா்ந்து வந்த இரு இளைஞா்கள் தாமரைச்செல்வியின் கழுத்திலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து தாமரைச்செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில் உத்திரமேரூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (26), லோகநாதன் (23) ஆகிய இருவா் தாமரைச்செல்வியிடமிருந்து நகை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த தெள்ளாா் போலீஸாா் அவா்களிடமிருந்து 7 பவுன் தங்க நகையை மீட்டனா்.