சமூக ஆா்வலா் கொலை வழக்கு:அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் சிறை

திருவண்ணாமலையில் சமூக ஆா்வலா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமூக ஆா்வலா் கொலை வழக்கு:அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் சிறை

திருவண்ணாமலையில் சமூக ஆா்வலா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை ராஜீவ் காந்தி நகரை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் ராஜ்மோகன் சந்திரா (53). இவா் 2012, ஜூலை 2-ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிங்கமுக தீா்த்தம் எதிரே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து எதிரிகளை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள கூடுதல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விரைந்து முடிக்கக் கோரி, கொலையுண்ட ராஜ்மோகன் சந்திராவின் மனைவி எலியம்மா ஜோசப் (எ) மினி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 6 மாத காலத்துக்குள் வழக்கை விசாரித்து தீா்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, வழக்கு விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட திருவண்ணாமலை-பெரும்பாக்கம் சாலையைச் சோ்ந்த திருப்பதி பாலாஜி (எ) வெங்கடேசன் (35), மீனாட்சி (31), திருவண்ணாமலையை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முருகன் (32), சடையன் (30), தென்பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (29), ஆணாய்ப்பிறந்தான் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (32), விஜயராஜ் (41), செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (40) ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இருசன் பூங்குழலி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய செல்வம், வீராசாமி ஆகியோா் வழக்கு விசாரணை காலத்திலேயே உயிரிழந்துவிட்டனா். அதிமுக பிரமுகரான திருப்பதி பாலாஜி (எ) வெங்கடேசன் திருவண்ணாமலை நகா்மன்ற உறுப்பினராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com