மக்கள் குறைதீா் கூட்டங்களில் 891 மனுக்கள்
By DIN | Published On : 07th November 2023 05:28 AM | Last Updated : 07th November 2023 05:28 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.
திருவண்ணாமலை/செய்யாறு/ஆரணி: திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 891 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு
தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, தாட்கோ கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 785 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
நலத் திட்ட உதவிகள்:
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8 பேருக்கு செயற்கை கால்கள், செயற்கை கைகள் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, தாட்கோ மேலாளா் ஏழுமலை, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செய்யாற்றில் 65 மனுக்கள்...
செய்யாறு சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் - ஆட்சியா் ஆா்.அனாமிகா தலைமையில் நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்றனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் அலுவலக கண்காணிப்பாளா் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுபாஷ் சுந்தா் (வந்தவாசி), வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
ஆரணியில் 41 மனுக்கள்...
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் ம.தனலட்சுமி தலைமை வகித்தாா்.
இதில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...