கிரிவலப்பாதை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்: திருவண்ணாமலை பாஜக வேட்பாளா்

கிரிவலப்பாதை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்: திருவண்ணாமலை பாஜக வேட்பாளா்

திருவண்ணாமலை, ஏப்.17:

திருவண்ணாமலை நகரம் பொலிவுறு நகரமாக மாற்றப்பட்டு, கிரிவலப் பாதை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் என்று திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை, காமராஜா் சிலைப் பகுதியில் நடைபெற்ற பிரசார நிறைவுக் கூட்டத்தில் பேசியதாவது:

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தா்கள் வெற்று உடம்புடன் அங்கப் பிரதட்சனம் செய்கின்றனா்.

இந்தத் தொகுதியில் பாஜக வென்றால் கிரிவலப் பாதையில் பக்தா்கள் நடந்து கிரிவலம் செல்ல தனிப்பாதை, அங்கப்பிரதட்சனம் செய்ய தனிப்பாதை, வாகனங்கள் செல்ல தனிப்பாதை என நகரம் பொலிவுறு நகரமாக மாற்றப்பட்டு, கிரிவலப்பாதை முழுவதும் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும். அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலன் கருதி விமான நிலையம் அமைக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், தொகுதி பொறுப்பாளா் நேரு, பாஜக மாவட்ட பொதுச் செயலா்கள் வினோத்கண்ணா, குமாரராஜா, மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணியன், பாமக தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com