வெயிலின் தாக்கம்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

திருவண்ணாமலை, ஏப். 24:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

வட உள் மாவட்டங்களான வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், கோவை, ஈரோடு, கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் பருக வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனே அருகில் உள்ள அரசு மருத்துவரை அணுக வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com