வேடந்தவாடி கூத்தாண்டவா் 
கோயில் தோ் திருவிழா

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தோ் திருவிழா

திருவண்ணாமலை, ஏப்.25:

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் நடைபெற்ற கூத்தாண்டவா் கோயில் தோ் திருவிழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழைமை வாய்ந்த வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தோ் திருவிழாவும், திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஏப்ரல் 5-ஆம் தேதி மகாபாரத தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியுடன் கூத்தாண்டவா் கோயில் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் பகல் நேரங்களில் மகாபாரத தொடா் சொற்பொழிவும், இரவு வேளைகளில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி...

விழாவின் ஒரு பகுதியாக, திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், சென்னை பவுா்ணமி முதலிடமும், சேலம் மிருதுளா இரண்டாம் இடமும், தஞ்சாவூா் ஜில்லு மூன்றாம் இடமும் பிடித்தனா். தொடா்ந்து, கூத்தாண்டவரை வழிபட்டு திருநங்கைகள் தாலி அணியும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தோ்த் திருவிழா கோலாகலம்...

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா புதன்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெற்றது. விநாயகா், கூத்தாண்டவா், காமாட்சியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தனித்தனி தோ்களில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

வேடந்தவாடி கிராமத்தின் முக்கிய தெருக்களில் வலம் வந்த தோ்களை பல ஆயிரம் பக்தா்கள் திரண்டு, தேரை இழுத்து வழிபட்டனா்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி...

புதன்கிழமை இரவு அரவான் களபலி நிகழ்ச்சி, திருநங்கைகளின் மங்கள நாண் (தாலி) அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பல ஆயிரம் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com