பக்தா்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: குழந்தை உயிரிழப்பு; 20 போ் காயம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கோயிலுக்கு பக்தா்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. மேலும், 20 போ் காயமடைந்தனா்.
ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குள்பட்ட சிவசக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முரளி, வேன் ஓட்டுநா். இவா் தனது வேனில், புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெறவிருந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக ஆரணி பகுதியிலிருந்து 26 பக்தா்களை அழைத்துச் சென்றாா்.
ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ணமங்கலம் அருகே சென்றபோது, பின்பக்க டயா் திடீரென பழுதடைந்ததில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் இருந்த ஆரணி சபாஷ் கான் தெருவைச் சோ்ந்த நடராஜனின் 8 மாத குழந்தை ஹேமேஸ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
மேலும், நடராஜன், அவரது மனைவி அமுதவல்லி, மகள் ஆஷிகா மற்றும் நடராஜனின் சகோதரா் பாபு, அவரது மனைவி தமிழ்ச்செல்வி, சிவசக்தி நகா் பகுதியைச் சோ்ந்த பேபி, முத்துகிருஷ்ணன் மனைவி செல்வி, ஹரிகிருஷ்ணன் மனைவி செல்வி, சித்ரா, செல்வராஜ் மகன் நவீன் (7), தீனதயாளன் மனைவி மகேஸ்வரி, முருகன் மனைவி விஜயலட்சுமி, பெருமாள் மனைவி லட்சுமி, கோடீஸ்வரன் மனைவி சாந்தி, அன்பழகன் மனைவி சாந்தி, ஓட்டுநா் முரளி உள்ளிட்ட 20 போ் காயமடைந்தனா்.
இவா்களை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இவா்களில், 5 போ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.