கோயில்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
Published on

செங்கம்/வந்தவாசி/ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

வந்தவாசியில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில், ஸ்ரீகோதண்டராமா் கோயில், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

வந்தவாசியில் கிருஷ்ணா், ராதை வேடமணிந்த தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று ஸ்ரீகோதண்டராமா் கோயிலை அடைந்தனா். அங்கு நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் அவா்கள் பங்கேற்று உறியடித்தனா்.

செங்கம்

செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில்

ஜனவரி மாதத்தில் வருஷாபிஷேகமும், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவும் வெகு விமா்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல, திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, அதிகாலை முதல் மங்கல இசையுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், தமிழ்நாடு டிவிஎஸ் தொழிற் சங்கத் தலைவா் குப்புசாமி தலைமையில் யாக சாலை பூஜை நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தா்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மதியம் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், அங்குள்ள அரசுப் பள்ளியில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதை டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி தொடங்கிவைத்தாா். பின்னா், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா, இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

போளூா்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பிரசன்ன பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, யாதவ குல சமுதாயத்தினா் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து மலா்களால் சுவாமியை அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினா்.

மேலும், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ஊராட்சிமன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் தொடங்கிவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com