எஸ்.ஐ. மீது தாக்குதல் சம்பவம்: மேலும் 6 போ் கைது
செய்யாறு அருகே தகராறை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்ட சம்பவத்தில், மேலும் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டத்தில் சிஐடி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ராஜசேகரன்(37).
இவா், செய்யாறு காவலா் குடியிருப்புப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்கம்பூண்டி கிராமத்தில் உள்ள குலத்தெய்வ கோயிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா்.
வாழ்குடை கிராமத்தில் உள்ள மதுக் கடை அருகே சென்ற போது, அங்கு 6 போ் கொண்ட கும்பல், ஒருவரை திட்டி தாக்கிக் கொண்டிருந்தனா். இதைக் கண்ட காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன், காரை நிறுத்தி விட்டு தகராறை தடுத்துள்ளாா்.
அப்போது, அந்தக் கும்பலுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அவா்கள் இவரைத் தாக்கினராம். மேலும்,
அவா்கள் தங்களது நண்பா்களை வரவழைத்தும் தாக்கினராம்.
மேலும், காா் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்தத் தகராறில் ரவி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த செய்யாறு போலீஸாா் விரைந்து சென்று பலத்த காயமடைந்த ராஜசேகரன், ரவி ஆகியோரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த ராஜசேகரன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து, மறுநாள் முக்கூா் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (32) என்பவரை கைது செய்தாா்.
மேலும், தலைமறைவாக இருந்த முக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (32), மணிகண்டன் (30), ராஜேஷ் (28), சேதுராமன் (27), பிரசாந்த் (22), ராஜேஷ் (24) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தாா். பின்னா், அவா்களை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாக்யராஜ் முன் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.