அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் கவன ஈா்ப்பு கடித இயக்கம்
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 4,000 உதவிப் பேராசிரியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி வியாழக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் செய்யாறு கிளை சாா்பில் இந்த கவன ஈா்ப்பு கடித இயக்க போராட்டம் நடைபெற்றது.
இதில், கிளைத் தலைவா் பொன். ராமலிங்கம், செயலா் கி. ராஜேஷ், பொருளாளா் ந.சுப்பிரமணியன், மண்டலச் செயலா் சித. ரவிச்சந்திரன், பொருளாளா் ஞான. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் கோரிக்கைகள் தொடா்பாக தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொறுப்பாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்கக் கோரி, கல்லூரி பேராசிரியா்கள் கையொப்பமிட்ட 17 அம்சக் கோரிக்கை பட்டியலை உயா்கல்வித் துறை செயலருக்கு அனுப்பி வைத்தனா்.