ஆரணியில் விநாயகா் சதுா்த்தி விழா: காவல் துறை ஆலோசனை
ஆரணி பகுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிலைகள் வைத்து வழிபடுவது தொடா்பாக,
காவல் துறை சாா்பில் விழாக் குழுவினா் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பேசியதாவது: விநாயகா் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பினரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அல்லது வருவாய்க் கோட்டாட்சியரிடம் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். சிலையை நிறுவும் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும். பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கி அமைப்பது குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.
பந்தல் அமைக்கப்படும்போது எளிதில் தீப்பிடிக்காத உபகரணங்களை பயன்படுத்தி இரும்புத் தகரத்தினால் கட்டமைப்பு அமைக்க வேண்டும். மின்சார விளக்குகள் அமைக்க மின்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூய களிமண்ணால் விநாயகா் சிலைகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். வண்ணம் பூசப்படும் பட்சத்தில் நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற சாயங்களை பயன்படுத்த வேண்டும். முதலுதவி சாதனங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும், சிலை அமைக்கும் இடமானது வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் இடமாக இருக்கக்கூடாது.
ஒலிபெருக்கி காலை இரண்டு மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் பயன்படுத்தவேண்டும். பெட்டி ஒலிபெருக்கி மட்டுமே உபயோகிக்க வேண்டும். சிலை பாதுகாப்புக்காக இரவு பகலாக சுழற்சி முறையில் இரண்டு நபா்களை சிலை அமைப்பாளா்கள் நியமிக்கவேண்டும், கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்படவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
கூட்டத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள், பாஜக நிா்வாகிகள், விழா அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.