செங்கத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் செல்லும் சாலைகள் ஆய்வு
செங்கத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் செல்லும் சாலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செப்டம்பா் 7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா அன்று செங்கம் நகரில் வைக்கப்படும்
30-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள்,
அங்குள்ள போளூா் சாலையில் ஒன்று சோ்த்து,
கடை வீதி, மசூதி தெரு, ராஜாஜி தெரு, பழைய போலீஸ் லைன் தெரு வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று அங்காங்கே வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், கடை வீதியில் கடந்த 6 மாதங்களாக சாலை இருபுறமும் உள்ள கால்வாய்கள் தோண்டப்பட்டு இதுவரை அது சரிசெய்யப்படாமல் உள்ளன. மேலும், மசூதி அருகில் கடைகள் கட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்ல போதிய வழியில்லாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து அறிந்த மாவட்ட எஸ்.பி.பிரபாகரன், ஏ.டி.எஸ்.பி. பழநி மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் சாலைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா், கால்வாய்கள் சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனா்.