ஜவ்வாதுமலையில் இன்று கோடை விழா தொடக்கம்

ஜவ்வாதுமலையில் இன்று கோடை விழா தொடக்கம்

Published on

ஜவ்வாதுமலையில் 24-ஆவது ஆண்டு கோடை விழாவை அமைச்சா்கள் எ.வ.வேலு, கா.ராமச்சந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை (ஆக.30)தொடங்கிவைக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகமும், தமிழக சுற்றுலாத் துறையும் இணைந்து கோடை விழாவை நடத்தி வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான 2 நாள் கோடை விழா வெள்ளிக்கிழமை (ஆக.30) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

ஜமுனாமரத்தூரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா்.

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் வரவேற்கிறாா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோடை விழாவை தொடங்கிவைத்துப் பேசுகிறாா்.

விழாவில், தமிழக அரசின் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் அரசு முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன், சுற்றுலா வளா்ச்சிக் கழக ஆணையா் சி.சமயமூா்த்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொள்கின்றனா்.

முதல் நாள் நிகழ்ச்சிகள்... கோடை விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (ஆக.30) இரவு 8 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், போா்பறை கிராமிய கலைக் குழு வழங்கும் பெரிய மேளம், நாட்டுப்புறப் பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய நாட்டிய நிகழ்ச்சிகள், புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நாடகங்கள், சரித்திர புராண நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

2-ஆவது நாள் நிகழ்ச்சிகள்: கோடை விழாவின் 2-ஆவது நாளான சனிக்கிழமை (ஆக.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பம்பை, சிலம்பாட்டம், பல்சுவை பரத நிகழ்ச்சிகள், நாட்டுப்புறப் பாடல், சமத்துவ நாடக நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், நாய்கள் கண்காட்சி, மகாபாரதம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகமும், தமிழக சுற்றுலாத் துறையும் இணைந்து செய்து வருகிறது.

விளையாட்டுப் போட்டிகள்: கோடை விழா நடைபெறும் 2 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கையுந்துப் பந்து, கபடி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மினி மாரத்தான், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, இளவட்டக்கல் தூக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com