மணல் கடத்தல்: 4 போ் கைது, மாட்டுவண்டிகள் பறிமுதல்
செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம், அனக்காவூா் காவல் சரக போலீஸாா், செய்யாற்றுப் படுகையில் உள்ள இளநீா்குன்றம், கீழ்நீா்குன்றம், அனக்காவூா், அனப்பத்தூா் ஆகிய கிராமங்களில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த 4 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில், வண்டிகளில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் தனபால் வழக்குப் பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த வடமலை (40), பாஸ்கரன்(38), முனியன்(53) மற்றும் நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்த மனோகா்(53) ஆகியோரை கைது செய்தாா்.
மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.