தமிழக மக்களுக்காக காங்கிரஸ் போராடியதில்லை: கே.அண்ணாமலை

தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடியதில்லை என்று மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.
வந்தவாசியில் நடைபெற்ற பிரசார நடைப்பயண நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
வந்தவாசியில் நடைபெற்ற பிரசார நடைப்பயண நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

வந்தவாசி: தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடியதில்லை என்று மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பிரசார நடைப்பயண நிகழ்ச்சி வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி அவா் பேசியதாவது:

நாட்டில் முதல்முறையாக பழங்குடியினரை குடியரசுத் தலைவராக ஆக்கியது பாஜக அரசுதான். இதுவே உண்மையான சமூக நீதி ஆகும். ஆனால், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போலி சமூக நீதி பேசி வருகின்றனா்.

3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக உறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த இந்த 31 மாதங்களில் டிஎன்பிஎஸ்சி தோ்வு மூலம் 10,500 போ் மட்டுமே அரசு வேலை பெற்றுள்ளனா்.

காங்கிரஸ் போராடியதில்லை: தமிழகத்தில் மக்களின் நலனுக்காக காங்கிரஸ் என்றும் போராடியதே இல்லை. தோ்தலின் போது சீட்டு வாங்க மட்டுமே வருவாா்கள்.

உலகளவில் 11-ஆவது பொருளாதார நாடாக இருந்த இந்தியாவை 9 ஆண்டுகளில் 5-ஆவது பொருளாதார நாடாக மோடி மாற்றியுள்ளாா்.

அவா், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளாா். 57 ஆயிரம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 4.81 லட்சம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.80 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. 3.58 லட்சம் பேருக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 4.07 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் கௌரவ நிதி வழங்கப்பட்டுள்ளது.

வந்தவாசி கோட்டையை சுற்றுலாத் தலம் ஆக்கவும், கோரைப்பாய்க்கு புவிசாா் குறியீடு பெறவும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலா் அசுவத்தாமன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன், வேலூா் பெருங்கோட்ட பொறுப்பாளா் காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் ஏழுமலை, நகரத் தலைவா் சுரேஷ், மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com