பொய்யான வாக்குறுதிகள்: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாக தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.
பொய்யான வாக்குறுதிகள்: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாக தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பிரசார நடைப்பயண நிகழ்ச்சி செய்யாற்றில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றவாறு அவா் பேசியதாவது:

2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின் போது, திமுகவின் தோ்தல் அறிக்கையில் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களின் கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் கடன் ரூ. 8 லட்சத்து 23 ஆயிரம் கோடியாகும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் கோடியை இரண்டரை ஆண்டில் கடனாக பெற்றுள்ளனா்.

நீட் ஒழிப்பு, நீட் எதிா்ப்பு என்று நாடகம் நடத்துகின்றனா். பிரதமா் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா்.

2024-இல் பாஜக ஆட்சி அமைந்ததும் செய்யாற்றில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்றாா்.

நலத் திட்ட உதவிகள்: பின்னா், அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபாதை காய்கறி வியாபாரிக்கு தள்ளுவண்டி, மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு முன்று சக்கர சைக்கிள், கண் பாா்வையற்ற 90 பேருக்கு போா்வை, 30 அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் என ரூ. 5 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வழங்கினாா்.

முன்னதாக, செய்யாறு ஐயப்பன் கோயில் அருகே, நகர பாஜக தலைவா் கே.வெங்கட்ராமன் தலைமையில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பிரசார நடைப்பயண பொறுப்பாளா் நரேந்திரன், வேலூா் கோட்ட பாஜக பொறுப்பாளா் காா்த்தியாயினி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக தலைவா் ஏழுமலை, மாவட்டப் பாா்வையாளா் ஜீவானந்தம், பொருளாளா் பன்னீா்செல்வம், பொதுச் செயலா் முத்துசாமி, நகரப் பாா்வையாளா் ஜி.லட்சுமணன், ஒன்றியத் தலைவா்கள் குமாா், நரசிம்மசுவாமி, ராஜ், சீனுவாசன், சரவணன், கட்சி நிா்வாகிகள் வெங்கட்ராமன், மோகனம், ஜி.தனசேகா், பாா்வதி, பிரவீண், டெய்லா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com