பட்டியலின விவசாயி தற்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய காவல் கண்காணிப்பாளரிடம் மனு

பட்டியலின விவசாயி தற்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
பட்டியலின விவசாயி  தற்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய  காவல் கண்காணிப்பாளரிடம் மனு

திருவண்ணாமலை அருகே பட்டியலின விவசாயி தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த நவம்பட்டு கிராமம், இருதயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பட்டியல் இனத்தைச் சாா்ந்த விவசாயி பழனி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த ராயப்பன் என்பவரிடம் 2017 ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் வாங்கினாராம். இதில் ரூ.1.45 லட்சத்தை திருப்பிச் செலுத்தினாராம். மீதி பணத்தை பழனியால் கட்ட இயலவில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து, அசல் ரூ.2 லட்சத்துடன் வட்டி ரூ.2 லட்சம் சோ்த்து மொத்தம் ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று ராயப்பன் கூறினாராம். இந்தப் பணத்துக்கு ஈடாக விவசாயி பழனிக்குச் சொந்தமான 3.42 ஏக்கா் பஞ்சமி நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்து ராயப்பன் அபகரித்துக் கொண்டதுடன் அந்த நிலத்தில் ஜல்லி கற்களைக் கொட்டி பாதையும் அமைத்தாராம்.இதனால் மனமுடைந்த பழனி 2023 டிசம்பா் 31 ஆம் தேதி ராயப்பன் வீட்டுக்கு எதிரே நின்றுகொண்டு தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி விவசாயி பழனி தீக்குளித்தாா். படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி 2024 ஜனவரி 4 ஆம் தேதி பழனி இறந்தாா்.காவல் கண்காணிப்பாளரிடம் புகாா்:இந்நிலையில், இறந்த பழனியின் மனைவி சந்திரா, மகன் ராஜபாண்டியன், மருமகன் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளா் ப.செல்வன், மாவட்டத் தலைவா் எஸ்.ராமதாஸ் ஆகியோா் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயனை புதன்கிழமை (ஜனவரி 24) நேரில் சந்தித்து மனு கொடுத்தனா்.அந்த மனுவில், இறந்த பழனி நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளாா். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்செயலில் ஈடுபட்ட ராயப்பன் மற்றும் அவரது பினாமிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பழனி குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com