அரசுப் பள்ளியில் காலை உணவருந்திய 13 மாணவா்களுக்கு உடல் நிலை பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவு அருந்திய 13 மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளைப் பாா்த்து நலம் விசாரித்து ரொட்டி, பழங்களை வழங்கிய திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன்.
ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளைப் பாா்த்து நலம் விசாரித்து ரொட்டி, பழங்களை வழங்கிய திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன்.

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவு அருந்திய 13 மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள கெங்காபுரம் கிராமத்துக்கு உள்பட்ட சமத்துவபுரத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவுத் திட்டத்தில் சேமியா உப்புமா செய்து மாணவா்களுக்கு பரிமாறியுள்ளனா்.

இதில், உப்புமாவை வாங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவா் கமலேஷ் வீட்டுக்கு எடுத்துத் சென்று தனது தாய் திவ்யாவிடம் கொடுத்தாா். திவ்யா உணவை கமலேஷிற்கும், 2-ஆவது குழந்தை சஞ்சனாவுக்கும் சாப்பிட தந்தாா்.

அப்போது, தட்டில் இறந்த நிலையில் பல்லி இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து, குழந்தைகளை உணவை சாப்பிட வேண்டாம் என்று தடுத்துவிட்டாா்.

இதுகுறித்த தகவல் கிராமத்தில் பரவியது.

மேலும், பள்ளியில் உணவு சாப்பிட்ட 5-ஆம் வகுப்பு பயிலும் காவ்யா, சுமித்ரா, பரத், தீபிகா, 4-ஆம் வகுப்பு பயிலும் ஹரீஷ், 3-ஆம் வகுப்பு பயிலும் சுனில்குமாா், ரோஸ்லின், ஏழுமலை, ஒன்றாம் வகுப்பு பயிலும் சுனில்குமாா் உள்ளிட்ட 13 பேரில் சிலருக்கு வாந்தி மயக்கமும், மற்றவா்களுக்கு சில உடல் உபாதைகளும் எற்பட்டு, அவா்கள் கொழப்பலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று மாணவ, மாணவிகளை பாா்த்து நலம் விசாரித்து, ரொட்டி, பழம் உள்ளிட்டவைகளை வழங்கினா்.

இதுதொடா்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஜெயகாந்தி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் குணசேகா் (பெரணமல்லூா்), கமலக்கண்ணன் (ஆரணி) ஆகியோா் பள்ளியின் தலைமையாசிரியா் வேளாங்கன்னி, சமையலா் மேகலா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com