ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

அனுமதியின்றி வைக்கப்படும் பதாகை: சட்டப்படி நடவடிக்கை- ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பாதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பாதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பதை நெறிமுறைப்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான அனுமதியைப் பெற நகராட்சி, பேரூராட்சி நிா்வாகத்தால் வழங்கப்படும் விண்ணப்பங்களை நிறைவு செய்து பதாகை வைக்க உத்தேசித்துள்ள நாளுக்கு 15 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.

பதாகை வைக்க உத்தேசித்துள்ள இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தால் அதன் உரிமையாளரிடம் தடையின்மைக் கடிதம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இடம் நகராட்சி, அரசு தொடா்புடைய இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தடையின்மைச் சான்றிதழ், காவல்துறைச் சான்றிதழ் ஆகியவற்றை வரைபடத்துடன் இணைக்க வேண்டும்.

நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மனுவையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களையும் கூராய்வு செய்து தகுதி இருப்பின் 6 தினங்களுக்கு (பேனா் வைக்கும் நாள் மற்றும் அகற்றும் நாள் உட்பட) உரிய படிவத்தில் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும்.

சாலைகளின் மூலைகள், தெருக்கள் கூடுமிடம், போக்குவரத்து சந்திப்பு போன்ற இடங்களில் இருந்து 50 மீட்டரைத் தாண்டி பதாகை வைக்கலாம். சாலையின் அகலம் 3 மீட்டரில் இருந்து 12 மீட்டருக்குள் இருப்பின் சாலை விளிம்பின் ஒரு பக்கத்தில் மட்டும் பதாகை வைக்க அனுமதிக்கப்படும்.

சாலையின் அகலம் 12 மீட்டருக்கு மேல் இருப்பின் சாலை விளம்பின் இருபுறமும் பதாகை வைக்க அனுமதிக்கப்படும். பதாகைகளுக்கு ஒன்றுக்கு ஒன்று குறைந்தது 10 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும்.

சாலை, பொது சொத்துக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் பதாகை வைக்க வேண்டும். சேதம் ஏற்பட்டால் முன் பணம் திரும்ப தரப்படமாட்டாது. சேதத்தின் அளவு அதிகமாக இருப்பின் கூடுதல் இழப்பீடு தொகை மனுதாரரிடம் இருந்து வசூலிக்கப்படும். விளம்பரப் பதாகையால் உயிரிழப்பு, உடல் காயம், சொத்துகள் சேதாரம் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவாா்.

ஒவ்வொரு விளம்பரப் பதாகையிலும் அனுமதி எண், அனுமதிக் காலம், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை போன்ற விவரங்களை அடிப்பாகத்தில் எழுத வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு சிறை, ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனை விதிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com