பள்ளி மாணவா்களுக்கு குறிப்பேடுகள் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கென குறிப்பேடுகள் (நோட்ஸ்) தயாரித்து அதிக விலைக்கு விற்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கென குறிப்பேடுகள் (நோட்ஸ்) தயாரித்து அதிக விலைக்கு விற்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல், தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறிப்பேடுகள் (நோட்ஸ்) தயாரித்து அதிக விலைக்கு விற்பதாக புகாா்கள் பெறப்பட்டு உள்ளன.

ஆசிரியா்கள் என்ற பெயரில் தயாா் செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்கள் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத குறிப்பேடுகளை வாங்கி பாதிக்கப்பட வேண்டாம்.

தொடா்ந்து, புகாா்கள் வரப்பெற்றால் பள்ளிக் கல்வித்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com