பொருளாதாரா மேம்பாட்டுக் கழகத்தில் கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் சமூகத்தினா், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதாரா மேம்பாட்டுக் கழகத்தில் கடனுதவி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திட்டம்-1...

இவற்றில் திட்டம் 1-இன் கீழ் பயன்பெறுவோரின் குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாக இருப்பின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாக இருப்பின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.20,00,000 கடன் வழங்கப்படும்.

திட்டம்-2...

திட்டம் 2-ன் கீழ் பயன்பெறுவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும்.

ஆண், பெண் இருபாலருக்கும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 வழங்கப்படும்.

கைவினை கலைஞா்களுக்கு...

கைவினைக் கலைஞா்களில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.ஒரு லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

கல்விக்கடன்...

இதுதவிர, சிறுபான்மையின் மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சம் திட்டம் 1-இன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2-இன் கீழ் ரூ.30 லட்சம் வரை மாணவா்களுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் போன்ற சிறுபான்மையினா் சமூகத்தினா் தங்களுக்குத் தேவையான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com